https://tamizhanseithigal.com/kuralukore-geetham/
செ.வ.இராமாநுசன்,
சான்றோர் கவனத்தைக் கவர்ந்த ‘குறளுக்கோர் கீதம்!’
அமெரிக்காவின் ‘குறள்கூடல் செம்மொழி அறக்கட்டளை’ சென்னையில் நேற்று மிகப் பெரிய அளவில் விழா ஒன்றினை நடத்தியது.
ஆம்! குறளுக்கோர் கீதம் என்கிற குறளிசைப் பேழை வெளியீட்டு விழா தான் அஃது.
செம்மொழி மாலா அமெரிக்க – ஹூஸ்டன் நகரில் மேற்காண் அறக்கட்டளையை அமைத்து அதன் மூலம் தமிழ்ப் பள்ளிக்கூடத்தையும் நடத்தி வருகின்றார்.
மருத்துவர் டி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அமெரிக்காவிலேயே மருத்துவராகப் பணியாற்றி வருகின்றார்.
இவர்களது இளைய மகன் செல்வன் ஆதி கோபால் அவர்கள் அமெரிக்க நாட்டிலேயே இளங்கலை பட்ட வகுப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார்.
கூடுதலாக திருக்குறளின் 1330 திருக்குறளையும் 133 இசை அதிகாரங்களாகப் பாடி வடிவமைத்து உள்ளார். இசை வேந்தர் வி.கே.கண்ணன் அவர்கள் இசையமைத்து உள்ளார்.
‘எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்’
என்ற குறளுக்கொப்ப செம்மொழி மாலா அவர்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றியைப் பெற்றன. ஆம்! சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் மாண்புமிகு ஆர்.மகாதேவன் அவர்கள் குறளுக்கோர் கீதம் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கினார். கீதத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றி மகிழ்வித்தார்.
பேழையைப் பெற்றுக் கொண்ட, தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதாளர் தமிழ்த்திரு வி.ஜி.சந்தோசம் அவர்கள் பெருமையுரையை ஆற்றி மகிழ்வித்தார்.
மற்றும் எழுத்தாளர் தமிழ்த்திரு சோம.வீரப்பன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை, இந்திய உறுப்பினர் முனைவர் ஆறுமுகம், முனைவர் ஆர்.பாண்டியராசன், பேராசிரியர் கவிதா இராஜசேகர் உள்ளிட்டோர் வாழ்த்துரை நல்கினர்.
ஏற்புரையை மாணவர் ஆதி கோபால் வழங்கினார். முன்னதாக, விழா தொடக்கத்தில் செம்மொழி மாலா கோபால் வரவேற்புரையை ஆற்றினார். நிகழ்வின் இறுதியில் மருத்துவர் டி.கோபாலகிருஷ்ணன் நன்றியுரையை வழங்கினார்.
நிகழ்வுகளை நற்றமிழ் செ.வ.இராமாநுசன் மற்றும் முனைவர் கவிதா இராஜசேகர் இருவரும் நெறிப்படுத்தினர்.
உலகத் தமிழர்களை இணைக்கும் திருக்குறள் போற்றத்தக்கது.
தாய்மை உணர்வுகளுடன் உலகெங்குமுள மாந்தர்களை ஆளும் திறனுடையத் திருக்குறள் வணங்கத்தக்கது.
திருக்குறள் ஒவ்வொன்றும் தீர்வுதரும் – தேடிப்
பெருக்குவோம் பேரின்பத் தேன்.
கட்டுரை ஆக்கம்: நற்றமிழ் செ.வ.இராமாநுசன்.
மகிழ்ச்சி!
நல்லதொரு பதிவுதனைத் தாய்த் தமிழ்நாட்டில் நிகழ்த்தி விட்டு, வெற்றிப் புன்னகையுடன் நாடு திரும்பும் தங்கத் தமிழ்ச்செல்வன் ஆதி கோபால் மற்றும் ஒளிர்கின்ற ஆதி என்னும் குத்துவிளக்குதனைத் தாங்கிப் பிடிக்கும் அன்னை மாலா கோபால் ஆகிய இருவருக்கும் நல்வாழ்த்துகள்!
நேற்று பெற்ற வெற்றியின் பெருமிதத்தைத் தொடருங்கள்! வாழ்க வளமுடன் பல்லாண்டு!